Translate

சனி, 5 மே, 2018

சமூக விரோதிகளால் சேதமாக்கப்பட்ட 2,200 ஆண்டுகால முருகன் கோயில்!



மாமல்லபுரத்துக்கு அருகில் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான முருகன் கோயில் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டு கல்லினால் ஆன வேல் உடைக்கப்பட்டிருக்கிறது.
தமிழர்களின் கடவுள் முருகன். முருகனின் கோயில் தமிழகம் முழுவதும் அதிகம் காணப்படுகிறது. ஆனால், முருகன்கோயில் சங்க காலத்தில் எப்படி இருந்ததோ, அப்படியே அதன் அமைப்பு மாறாமல் மாமல்லபுரத்துக்கு அருகில் சாலவன்குப்பத்தில் மட்டுமே காணப்படுகிறது. சங்ககால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள செங்கல் கட்டுமானத்துக்கு ஆதாரமாக இருந்த கோயில் 'சாலவன் குப்ப முருகன் கோயில்' மட்டுமே. இக்கோயில் அடையாளம் தெரியாத நபர்களால் சேதம் செய்யப்பட்டுள்ளதை நேற்று கண்டறிந்திருக்கிறார்கள் தொல்லியல் ஆர்வலர்கள் .
கோயில் சிதைவடைவதற்கு முன்
ஏற்கெனவே காற்று, மழை என்று இயற்கைக் காரணிகளால் சேதமடைந்திருந்த கோயிலில் சங்ககால கட்டுமானத்துக்குஅடையாளமாக அதன் அடித்தளம் மற்றும் முற்கால பல்லவர் காலத்தில் நடப்பட்டிருந்த கல்லினால் வேல் மட்டுமே எஞ்சி இருந்தது. கோயிலுக்கு முன் நடப்பட்டிருந்த கல் வேலும் இப்போது பிடுங்கி உடைக்கப்பட்டிருப்பது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மாமல்லபுரத்துக்கு அருகில் இருக்கிறது சாலவன் குப்பம் கிராமம். இங்குப் பல்லவர் கால புலிக்குகை மற்றும் அதிரணசண்டேசுவரம் எனும் பல்லவர் கால குடைவரைக் கோயில்கள் இருக்கின்றன. இவற்றுக்கு அருகில் இருக்கிறது முருகன்கோயில். இக்கோயில் 2004 -ம் ஆண்டு வரை மண்ணுக்குள் புதைந்திருந்தது. சுனாமியில் ஏற்பட்ட மண் அரிப்பில் வெளிப்பட்டது இக்கோயில். இதற்கு முன்பே அப்பகுதியில் 1972 -ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று 'முருகன் கோயிலுக்கு மூன்றாம் குலோத்துங்கச் சோழன் கொடுத்த நிவந்தம்' பற்றித் தெரிவிக்கிறது. அக்காலம் முதலே தேடப்பட்ட முருகன் கோயில் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் வெளிப்பட்டது.
சங்ககால கோயில் கட்டுமானம் எப்படி இருக்கும் என்பதற்கு ஆதாரமாக இருந்தது அக்கோயிலும், கல் வடிவ வேலும். ஆனால், இப்போது அந்த வேலும் துண்டாக உடைக்கப்பட்டிருக்கிறது.
சமூக விரோதிகளால் சேதமாக்கப்பட்ட 2,200 ஆண்டுகால முருகன் கோயில்!
சிதைக்கப்பட்ட பல்லவர்கால முருகன் வேல்
இதுகுறித்து தொல்லியல் ஆர்வலரும், உடைக்கப்பட்ட வேலினைப் பார்த்து தகவல் கொடுத்த மாணிக் ராஜேந்திரனைத் தொடர்புகொண்டபோது, "சங்ககால முருகன் கோயில் சேதப்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருக்கிறது. மக்கள் நம் பாரம்பர்ய தொன்மைச் சின்னங்கள் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். மக்கள் விழிப்பு உணர்வை அடைந்தால் மட்டுமே நம் பழைமையைக் காக்க முடியும்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
கோயிலின் தற்போதைய நிலையைப் பற்றி விசாரிக்கையில் தொல்லியல் துறையினர் கோயிலைப் பூட்டி பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். விரைவில் உடைக்கப்பட்ட வேலினை ஒன்று சேர்த்து ஒட்டி விடுவதாகக் கூறியிருக்கிறார்கள். சங்ககால முருகன் வேலினை பழையபடி ஒன்று சேர்த்து மீண்டும் நடப்பட வேண்டும் என்பதே தொல்லியல் ஆர்வலர்களின் விருப்பமாக இருக்கிறது.
மேற்கொண்டு சமூக விரோதிகள் சேதப்படுத்தாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்