Translate

சனி, 18 ஜனவரி, 2020

சித்தர் மரபுக் குறியீட்டுப் பாறைத் தீட்டல் .

புதிய எழுத்துப் பொறிப்புக் கண்டுபிடிப்பு 









    வீரபாண்டி சித்தர் குகை எழுத்து .           

                  ககன்ய  காய

           கமன சித்தர் தக்கன் 

    அவ்வப்போது நண்பர்கள் புதிதாகக் கண்டுபிடித்த , படித்தறிய இயலாதத் தொல்லெழுத்துப் பொறிப்புகளை எனக்கனுப்பி படிக்கக் கேட்பார்கள் . அவ்வாறுதான் அண்மையில்  109 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட  பாபனாசம் சன்யாசிப்புடவு  கல்வெட்டு என்னால் படிக்கப்பட்டது . இப்போது விழுப்பரம் மாவட்டம் திருக்கோவிலூரிலிருந்து  9 கிமீ தொலைவிலுள்ள வீரபாண்டி என்னும் சிற்றூரிலிருந்து ஒரு அரிய கல்லெழுத்துப் பாறைத் தீட்டல் வந்துள்ளது . நண்பர் ஒரிசா பாலு அவர்களது நண்பர்கள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர் . ஆசிரியர் சிலம்பரசன் என்னும் உள்ளூர்க்காரர் கண்டுபிடித்து விழுப்புரம் செங்குட்டுவன் வாயிலாக வந்துள்ளது . இதுகுறித்து சிற்றிங்கூர் ராஜா என்பவரது முகநூல்பதிவில் நான் முன்பு     படித்துள்ளேன் . வீரபாண்டி ஏரிப் பகுதியில் உள்ள ஒரு பாறைக் குன்றின் இயற்கைக் குகைத்தளத்தில் வெள்ளை வண்ணத்தால் எழுதப்பட்டுள்ளது . அதுகுறித்தப் படங்களையும் இணைத்துள்ளேன் . முதல் பார்வையிலேயே இவை அழகுணர்வால் தீட்டப்படாமல் ஒரு நோக்கத்துடன் தீட்டப்பட்டிருப்பதை என் 50 ஆண்டுகாலப் பட்டறிவால் உணர முடிந்தது . வடிவங்களைப் பாறைகளில் கவனத்துடன்  வரைந்துள்ளனர் . எனது 25 ஆம் வயதில் சிந்து எழுத்து வடிவங்களின் மீது கொண்ட ஆர்வம் , பின்னர் தமிழி  எழுத்தின் மீதான விருப்பமாக வளர்ந்தது . அந்தப் பட்டறிவு தந்த உள்ளுணர்வே என்னை இன்றுவரை வழிநடத்திச் செல்கிறது . தற்போது வீரபாண்டி எழுத்துகளைப் படிக்கவும் உதவியுள்ளது என்றே நம்புகிறேன்
    எனது ஆய்வுக் கருத்துகள் ஒவ்வொரு நாளும் உறுதிப்பட்டு வருவதும் , தமிழக எழுத்துச் சான்றுகள் மேலும் மேலும் தொன்மைக் காலத்தை நோக்கி நகர்ந்து சிந்து வெளி நாகரிகத்திற்கும் தமிழகத்திற்குமான இடைவெளி சுருங்கி வருவதும் இந்நாளில் மகிழ்ச்சியூட்டுகிறது .  சிந்து நாகரிக எழுத்துகள் படிப்படியாக மாறி தமிழியாகும் மாற்றத்துக்கான சான்றுகள்  குஜராத் பேட் துவாரகை எழுத்தில் தேடியது போக  இப்போது தமிழகத்திலேயே கிடைத்து வருவதைக் காண்கிறேன் . அத்தகைய மாற்றத்தின் இறுதி நிலைகளைச் சன்யாசிப்புடவு வடிவங்களில் கண்டதுபோல  ,  மாற்றத்தின் தொடக்கநிலை வடிவங்களை நான் திருக்கோயிலூர் அருகே உள்ள வீரபாண்டியில் காண்கிறேன் . சிந்துக்கும் நமக்குமான இடைவெளியைப் பானையோட்டு எழுத்து வடிவங்களுக்குப் பதிலாக சிந்து எழுத்துப் பொறிப்புகளே நிறைவு செய்யும் நிலையை அடைவது உறுதி என்றும் உணர்கிறேன் .
     சிந்து நாகரிக அழிவிற்குப் பின்னரான அதன் எழுத்துத் தொடர்ச்சி சிந்து வெளியை ஒட்டிய எங்கும் கிடைக்காமல் அவை பானையோட்டு எழுத்துகள் ,  தமிழகச் சிந்து எழுத்து வடிவங்களாகத் தமிழகத்தில் மட்டுமே கிடைக்கின்றன . இந்த  வரலாற்றுச் சான்றுகளுக்குப் பின்னால் ஒரு வரலாற்று அடிப்படை இருப்பதால்  சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியான இந்திய வரலாற்றினைத் தமிழகத்திலேயே தேட வேண்டும் என்ற உண்மை நிறுவனமாகிறது . மேலும் , வீரபாண்டி பாறைத்தீட்டலுடன் தொடர்புள்ள இன்னொரு கருத்து அது விழுப்புரம் மாவட்டம் கீழ்வாலை எழுத்து வடிவங்களுக்கு மிக அண்மையில் கிடைப்பதுமாகும் . வியப்பளிக்கும் இன்னொரு செய்தி நான் இதயத் தாக்குதலுக்கு ஆளாவதற்குச் சில மாதங்கள் முன்னரே  கீழ்வாலையைப்பற்றி ஒரு சிறு புத்தகம் எழுதுவதாகத் திட்டமிட்டிருந்தேன் . அது இயலாமல் போனதால் முகநூலில் ஒரு விரிவான பதிவினைச் செய்வதற்கு நினைத்திருந்த போதுதான் நண்பர் ஒரிசா பாலு எனக்கு இப்பாறைப் பொறிப்பைப்பற்றியக்   கோரிக்கை வைத்தார் . அதனை ஏற்று நான் மேற்கொண்ட ஆய்வே இப்போது நான் உங்கள் முன் படைப்பது .
     வீரபாண்டி எழுத்து வடிவங்கள் நான்கு தொகுதிகளாகத் தீட்டப்பட்டுள்ளன . அருகருகே உள்ள இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையேயாகும் . அவற்றை திரு . சிலம்பரசன் வரிசைப் படுத்தியிருக்கும் முறையும் பாராட்டத் தக்கதேயாகும் . முதல் தொகுதி நான்கு வடிவங்களையும் , இரண்டாம் தொகுதி  இரு சொற்களாக ஐந்துவடிவங்களையும் , மூன்றாவது தொகுதி  நான்கு வடிவங்களையும் ,   நான்காவது தொகுதி  மூன்று வடிவங்களையும் கொண்டுள்ளன . வடிவங்கள் காட்டும் பொருள்நிலை சொல்நிலைக்கேற்ப பகுதிகளாக அவை அமைந்துள்ளன . முதலில் அவ்வடிவத் தொகுதிகளின் பொருள்நிலைக்கேற்ப அமைக்கிறேன்  :

      1)    கே ய     க க
      2)    க கன் ய     கா ய
      3)    க க க ய   
              1  2  3          3க ய   - முகய
      4)    த  க் க்

இவ்வடிவங்களின் அடிப்படையில் அவர்கள் சொல்லக் கருதிய கருத்து
     
       1)   = கேய  ககன்
       2)   =  ககன்ய  காய
       3)   =  முகய
       4)   =  தக்கன்

இவற்றுள்   ( அ )  (1)  கக என்பதன் இரண்டாவது வடிவம் ,  (3)  முகய என்பதன்  மூன்றாவது வடிவம்  ,  (4)  தக்க என்பதன் இரண்டு மற்றும் மூன்றாவது வடிவங்கள் ஆகியவை வடிவமைப்பால் மனிதக் கருத்துணர்த்தி உயர்திணை ஆண்பால் உணர்த்தி வந்தன . ( ஆ )  2 ஆம் தொகுதியின் இடமிருந்து  இரண்டாவது வடிவம்  மனித வடிவ  க  மற்றும் Y  வடிவ  ன் எழுத்து இணைந்து கூட்டுவடிவமாகி  கன் என்ற அசை உணர்த்தி  மனிதன் உட்கார்ந்திருப்பது போல மடிந்த நிலையில் உள்ளது . இத்தகைய  தவ என்ற  வடிவம் பொதிகை  குகை எழுத்தில்  மடிந்த நிலையில் வருகிறது . துறவிகள் இவ்வாறு எழுதுவதில் ஏதேனும்  மறைபொருள் இருக்கலாம் . ( இ ) 3 ஆம் தொகுதியில் 3 க வடிவங்கள் வந்து - க க க = முக என்றும் (  மு / மூ = மூன்று ) அதனுடன்  ய  என்ற  எழுத்து சேர  -  முகய என ஆனது . முகய் =  குகை . சிந்துவில்  நான்கு  ய ய ய ய  எழுதி =  நாய ( 2950 - மகாதேவன் ) = தலைவன் என்று எழுதுவர் . அவ்வாறே மூய என்றும் எழுதினர் .  (ஈ )  சிந்துவில் × என்பது  த  வடிவம் . இங்கு ,  பாறை எழுத்தில்  சற்று மாறி வந்தது . 
     பொருள்நிலையில்  கேயம் = இசை , ககம் =  வானம் .  ககன் =  வானவன் . ககனம் =  வானம் . காயம் = உடல் . ககன்ய  =  ககனத்திற்குரிய -  வானில் செல்லும் . வானசாரி =  ககன சஞ்சாரி  -  சித்தர்கள் .
     தங்கள் பூத உடலுடன் வானத்தில் சஞ்சரிக்கும்  சித்தர்கள் =  ககன  ( கமன ) சித்தர்கள் . குற்றாலக் குறவஞ்சி சித்தர்கள் வான்வழியே குற்றால நாதரைத் தொழ வருவதை  '  கமன சித்தர் வந்து வந்து காய சித்தி விளைப்பர்  '  என்று  பாடுகிறது . தமது பருவுடலுடன் வானத்தில் சித்தர்கள் சஞ்சரிப்பது  காய சித்தி எனப்படும் . இப்பாறை முகையில் ( குகையில் )  தங்கி இருந்தோர் ககன சாரிகள் எனப்படும் ககன சித்தர்கள் என்று மக்கள் நம்பியதை இவ்வெழுத்துகள் உணர்த்துகின்றன . இதன் பொருள் குறித்து நான் இதற்கு மேலே பேச விரும்பவில்லை . ஒரு வரலாற்று ஆய்வாளனது பணி அவன் கண்டு கூறும் பொருள் விளக்கப்  பொருத்தம்   ஒரு நிகழ்வில்  எத்தகைய பங்காற்றுகிறது என்பதுடன் முடிகிறது .  மேலாய்வு மொழியாய்வாளர்களுடையதேயாகும் .
     இம்முகையில் வாழ்ந்தவன் இசை வானவன்  (  கந்தர்வன் ) என்று கருதத் தக்கவன் ,   அவன்  ககனசாரி என்னும் கமன  சித்தனாவான் ,   அவன் இக்குகைக்குரியவன் ,  அவன் பெயர் தக்கன் என்பதாகும் . இத்துறவிகள்  அறிவர்  வழிச்  சித்தர்களாவர் . இப்பகுதிக்கு அண்மையிலுள்ள திரு அருண மலை எனப்படும் திருவண்ணாமலை சித்தர்கள்  உறையுமிடம் என்று இன்றும் பெயர் பெற்றுள்ளது . இந்த வீரபாண்டியைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில்  கீழ்வாலை ,  சாணூர் ,  பெருமுக்கல் ஆகிய இடங்களில்  தெளிவான சிந்து எழுத்து வடிவங்கள் கிடைத்துள்ளன . கீழ்வாலை -  வீரபாண்டி  -  பெருமுக்கல் என்ற  காலநிலைப்படி வரிசைப்படுத்தலாம் .   பெருமுக்கல்  கிமு   700  என்றால்  வீரபாண்டி எழுத்துகள் இன்னும் தொன்மையினவாய் கிமு 1000  என்ற கால அளவுக்குக் குறையாதத்  தொல்லெழுத்துகளாகலாம்

நன்றியுடன்
படித்து கூறிய ஐயா நாகை.பா.ஜீவா அவருடைய பதிவு
https://m.facebook.com/story.php?story_fbid=182083542871794&id=100032104492713

ஒரிசா பாலு ஐயா கடல் சார் ஆராய்ச்சியாளர்
செங்குட்டுவன் ஊடகவியலாளர்
திருக்கோவிலூர் நல்லதம்பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக